மும்பை: ஐபிஎல் 2023 தொடரின் 54வது லீக் ஆட்டம் நேற்று (மே 9) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஆரம்பமே அதிர்ச்சி தரும் விதமாக விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டூ பிளசிஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து 65 ரன் சேகரித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேக்ஸ்வெல் 68 ரன், தினேஷ் கார்திக் 30 ரன் ஆகியோ ஆறுதல் அளித்தனர்.
இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெஹ்ரெண்டோர்ஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 82 ரன்களை குவித்தார்.
அதேபோல், நேஹல் வதேரா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் முறையே 52 மற்றும் 42 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவ்வாறு சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.3வது ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இருப்பினும், இந்த போட்டியிலும் ரோகித் சர்மா 7 என்ற சொற்ப ரன்னிலே ஆட்டம் இழந்து தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதேநேரம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹசரங்கா மற்றும் விஜயகுமார் விசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகள் உடன் 7வது இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: CSK vs MI: சிஎஸ்கேவுக்கு 'விசில் போடு': மும்பையை வீழ்த்தி அபாரம்-புள்ளிப்பட்டியலில் 2ம் இடம்!