சென்னை: ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் எனப் பலரும் சென்னை அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அணியைப் பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் சென்னை அணி வெற்றியைக் கொண்டாடும்விதமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மஞ்சளும், கறுப்பு-சிவப்பும்
முதல் பதிவில், சென்னை அணி வீரர்கள் இருக்கும் புகைப்படத்துடன், 'மீண்டு வருவது - இதுதான் சென்னையின் வழக்கம்' எனப் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, மு.க. ஸ்டாலின், தோனி இருவரின் புகைப்படத்திற்கு மேல், '2021 எங்களுக்கு செம்ம வருசம்ப்பா' எனக்குறிப்பட்டிருந்தது.
அதாவது, 2021ஆம் ஆண்டில் ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டதையும், தோனி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றதையும் ஒப்பிட்டு இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
சேகர்பாபுவின் இந்த ட்வீட்களை இணையவாசிகள், இணையத்தில் பகிர்ந்து மஞ்சள் ஹார்டின் மட்டுமில்லாமல் கறுப்பு, சிவப்பு ஹார்டின்களையும் பறக்கவிட்டுவருகின்றனர்.
துபாய் பன்னாட்டு மைதானத்தில் நேற்று (அக். 15) நடைபெற்ற இறுதிப்போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி