மும்பை: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று (மே 21) நடைபெறுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று, 6ஆவது இடத்தில் உள்ளது.
வெற்றி முக்கியம்: மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சன் ரைசர்ஸ் போட்டியை வீழ்த்தியாக வேண்டும். நடப்பு சீசனில் சொந்த மண்ணில் நடைபெற்ற 6 போட்டிகளில், 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி. 186, 213, 200 ரன்களை சேசிங் செய்து பலத்தை நிரூபித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இன்றைய போட்டியில் முழு பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
சன் ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. 8 புள்ளிகளைப் பெற்றுள்ள அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது. எனினும், இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிப் பெற போராடும். கிளாசென், மார்க்ரம், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்கள்.
மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், கேமரூன் க்ரீன், கிறிஸ் ஜோர்டன், ஷோகீன்/குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், மத்வால்.
சன் ரைசர்ஸ் உத்தேச அணி: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹேரி ப்ரூக், பிலிப்ஸ், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, மயங்க் தாகர், நிதிஷ் குமார் ரெட்டி/உம்ரான் மாலிக், நடராஜன்.
மற்றொரு ஆட்டம்: பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, முதலிடத்தில் உள்ளதால் அந்த அணி தோற்றாலும் பாதிப்பில்லை. ஆனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் கோலி, டுபிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பியே அந்த அணி உள்ளது.
பெங்களூரு உத்தேச அணி: விராட் கோலி, டுபிளெஸ்ஸி (கேப்டன்), மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், பிரேஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), பார்னல், கரண் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சபாஸ் அகமது.
குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், அபிநவ் மனோகர்/விஜய் சங்கர், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், ஜோஸ் லிட்டில், நூர் அகமது, ஷமி, மோகித் சர்மா.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றால் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது? தோற்றால் என்ன நடக்கும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
* மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெறும். ஆனால் மும்பை அணியின் தற்போதைய ரன் ரேட்டை விட (-0.128), பெங்களூரு அணியின் ரன் ரேட் (0.180) முன்னிலையில் உள்ளது. பெங்களூரு அணி, குஜராத்தை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும் அதன் ரன் ரேட் உயரும். ஆனால் மும்பை அணி, சன்ரைசர்ஸ் அணியை குறைந்தது 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். ஏனென்றால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
* ஒருவேளை பெங்களூரு, மும்பை அணிகள் தோற்றுவிட்டால், ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏனென்றால் 3 அணிகளும் 14 புள்ளிகளை பெற்றிருக்கும். அப்படி நேர்ந்தால் மும்பை அணி குறைந்த ரன் ரேட் காரணமாக வெளியேறி விடும். அதன்பிறகு பெங்களூரு - குஜராத் அணிகள் மோதும் ஆட்டத்தை வைத்து ரன்ரேட் கணக்கிடப்படும்.
* பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தால் அதை 19.3 ஓவர்களுக்குள் குஜராத் அணி சேசிங் செய்ய வேண்டும். பெங்களூரு அணி முதலில் பந்துவீசினால் குஜராத் அணி 180 ரன்களாவது எடுக்க வேண்டும். மேலும், பெங்களூரு அணியை குஜராத் அணி 174 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இதெல்லாம் நடந்தால் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம்.
*மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முடிவு எட்டப்படாத பட்சத்தில், குஜராத் அணியை பெங்களூரு வீழ்த்தியிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையென்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.
*பெங்களூரு - குஜராத் அணிகள் மோதும் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லையெனில், சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தினால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இல்லையெனில் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு சென்றுவிடும்.
*ஒருவேளை இரண்டு ஆட்டங்களிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.