சென்னை: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 3) டாடா ஐபிஎல் 2023 தொடரின் 6ஆவது லீக் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களம் காண்டன. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
முதல் இன்னிங்ஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க பேட்டர்களான டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடினர். 9 ஓவர்களில் 110 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக கெய்க்வாட் வெறும் 30 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அதேபோல கான்வே 25 பந்துகளில் 40 ரன்களை குவித்தார்.
அதன் பின் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்து சிவம் துபே களமிறங்கினார். 10 ஓவரின் 2ஆவது பந்தில் கான்வே விக்கெட்டானார். 4ஆவதாக மொயீன் அலி களமிறங்கி சிவம் துபே உடன் களம் கண்டார். இருவரும் நிதானமாக ஆடவே சில ஓவர்களில் ரன் ரேட் குறைந்தது. ஆனால், துபே 13 ஓவரில் இருந்து அதிரடி காட்டினார்.
பவுண்டரிகளை பறக்கவிட்டார். இருப்பினும், ரவி பிஷ்னோயின் அடுத்தடுத்த ஓவர்களில் துபே மற்றும் மொயீன் அலி விக்கெட்டாகினர். அதன்பின் பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு கூட்டணி பேட்டிங் செய்தது. இதையடுத்து வந்த ஜடேஷா 3 ரன்களில் வெளியேறினார்.
8ஆவதாக களமிறங்கிய தோனி முதல் 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி 3ஆவது பந்தில் விக்கெட்டானார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 217 ரன்களை குவித்தது. மறுபுறம் பந்துவீச்சில் லக்னோவின் மார்க் வூட், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸ்: லக்னோ அணி 218 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடவே, அவருடன் களமிறங்கிய கைல் மேயர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னையை போலவே ரன் ரேட்டை 12ஆக வைத்திருந்தனர்.
5 ஓவர்கள் முடிவிலேயே 78 ரன்களை குவித்தனர். கைல் 21 பந்துகளுக்கு 53 ரன்களை குவித்திருந்தார். ராகுல் 12 பந்துகளுக்கு 18 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் 5 ஓவரின் 3ஆவது பந்தில் கைல் மேயர்ஸ் விக்கெட்டானார். இவரது விக்கெட்டுக்குப் பின் ரன் ரேட் சரிந்தது. 3ஆவதாக வந்த தீபக் ஹூடா 6 பந்துகளில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து கேஎல் ராகுலும் விக்கெட்டானார். சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் லக்னோ பேட்டர்கள் திணறினர். 9 ஓவரின் இறுதி பந்தில் க்ருனால் பாண்டியாவும் விக்கெட்டானார். அடுத்தாக வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் கணிசமாக ரன்களை எடுக்க தொடங்கினார். ஆனால், 13 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். லக்னோவின் வெற்றிக்கு சிறந்த பேட்டரான நிக்கோலஸின் அதிரடி ஆட்டம் தேவைப்பட்டது. இருப்பினும் விக்கெட்டில் கவனம் செலுத்தியதால், பொறுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை லக்னோ அணி எடுத்திருந்தது. அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் & கேப்டன்), சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்.
இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.. முழு அட்டவணை..