அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் 6 விருதுளை வென்றுள்ளார். 17 ஆட்டங்களில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய ஜாஸ் பட்லருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல அதிக சிக்ஸர்கள், அதிக பவுண்டரிகள், பவர் பிளேயர் ஆப் தி சீசன், கேம் சேஞ்சர் ஆப் தி சீசன், தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதுகளை ஜாஸ் பட்லர் வென்றார். இதன் மூலம் அவருக்கு ஒட்டுமொத்தமாக 60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
ஜாஸ் பட்லர் நடப்புத்தொடரில் 45 சிக்ஸர்களும் , 83 பவுண்டரிகளும் விளாசினார்.
தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த யுஸ்வேந்திர சாஹல் ஊதா நிறத்தொப்பியை பெற்றதுடன் 10 லட்சம் ரூபாயையும் வென்றார்.
சூப்பர் ஸ்டிரைக்கர் ஆப் தி சீசன் விருதினை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் பெற்றார். நேர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கான விருது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு வழங்கப்பட்டது.
வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் உம்ரான் மாலிக் வென்றார்.
தொடரில் அதிவேகப்பந்து வீச்சிற்கான விருதினை குஜராத் டைட்டன்ஸ் வீரர் லாக்கி பெர்குசன் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் 157.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
தொடரின் சிறந்த கேட்ச்சிற்கான விருதை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் எவின் லீவிஸ் பெற்றார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் அடித்த பந்தை ஒற்றை கையில் கேட்ச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Women's T20 Challenge: 3ஆவது முறையாக பட்டத்தை வென்றது சூப்பர்நோவாஸ்