அகமதாபாத்: கரோனா தொற்று நாடு முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஐபிஎல் தொடரானது எந்தச் சலனமும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு வெற்றியைப் பதிவு செய்து கடைசி இடத்திலும் உள்ளன.
பஞ்சாப் அணிக்கு பெருந்தொந்தரவாக பந்துவீச்சு இருந்துவந்த நிலையில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை மிடில் ஆர்டரை மிரட்சியடைய வைத்தனர். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நான்கில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய பஞ்சாப், சேப்பாக்கம் ஆடுகளத்தை தன்வசமாக்கி கடந்த போட்டியை வென்றது. நிக்கோலஸ் பூரன் தொடர்ந்து சொதப்பி வருவதால் டேவிட் மாலன் இன்று பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானிடம் தோல்வியடைய, பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதே காரணம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியிருந்தார். ஒரு சில போட்டிகளில் கில், ராணா, திரிபாதி போன்றோர் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்கோரை மேற்கொண்டு எடுத்து செல்வதில் தொடர்ந்து தவறி வருகின்றனர்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டி இதுதான் என்பதால் ஆடுகளத்தை கணிப்பது சற்று கடினமாக இருக்கலாம். மோர்கன், இந்தியாவிற்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் இங்கிலாந்தின் கேப்டனாக அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய அனுபவமுள்ளதால் கொல்கத்தா அணிக்கு அது கூடுதல் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி, கொல்கத்தா 18 போட்டிகளிலும், பஞ்சாப் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி அணியின் ஆஸ்திரேலிய வீரர்கள்!