சென்னை: 14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் தொடங்கியன.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெரும் நம்பிக்கையோடு பெங்களூரு அணியும், தனது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணியும் இன்றைய போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
பெங்களூரு அணி பேட்டிங் வரிசை இன்னும் டி வில்லியர்ஸ், விராட் கோலி இருவரையும் நம்பியே உள்ளன. மேக்ஸ்வெல் நடுவரிசையில் கைகொடுத்தாலும் தொடக்க வரிசை பலமிழந்து இருப்பதால், ஆர்சிபி அணி எளிய ஸ்கோரை கூட அடிப்பதற்கு சிரமப்படுகிறது. படிக்கல் இன்று அணிக்கு திரும்பும்பட்சத்தில் பெங்களூருக்கு அது கூடுதல் பலம் சேர்க்கும்.
ஹைதாரபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, அப்துல் சமத் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருந்தாலும் தொடக்கம் கடந்த போட்டியில் சரிவர அமையவில்லை. அதனால் தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹைதராபாத் பெரிய ஸ்கோரை அடைய வாய்ப்புள்ளது.
ரஷித் கான் வழக்கம்போல் தனது சூழல் மயாஜாலத்தை தொடங்கிவிட்ட நிலையில், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன், முகமது நபி என அவருக்கு துணையாக பந்துவீச்சில் படையே நிற்பது ஹைதராபாத் அணியின் பலம். பெங்களூரு கேப்டன் விராட் கோலி 7 முறை சந்தீப் சர்மாவிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
ஆனால் ரஷித்தை போல் ஆர்சிபியில் விக்கெட்டுகள் வீழ்த்தி, குறைவான ரன்களை விட்டுக்கொடுக்கும் அளவிற்கான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. சாஹல் கடந்த சில மாதங்களாகச் சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், இன்றைய போட்டியில் அவருக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது.
ஹர்ஷல் படேல் தனது அதிரடி யாக்கர்கள் மூலம் ஹைதராபாத் அணியின் நடுவரிசையை ஆட்டம்காண செய்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதுவரை 18 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 10 முறை ஹைதராபாத் அணியும், 7 முறை பெங்களூர் அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
இதையும் படிங்க: IPL 2021 MI vs KKR : 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!