சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் - நிதீஷ் ராணா இணையர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ராணா, புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோரின் தொடக்க ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை விளாசினார். சுப்மன் கில் தனது பங்கிற்கு நடராஜன் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டினார். இதனால் பவர்-பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கேகேஆர் அணி எடுத்தது.
ரஷித் கான் வீசிய ஏழாம் ஓவரில், சுப்மன் கில் 15 (13) ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி சற்று அதிரடி காட்ட, மறுமுனையில் ராணா 37 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 15ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்களை விட்டுக்கொடுக்க, திரிபாதி 28 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் திரிபாதி 53 (29) ரன்களிலும், அதிரடி வீரர் ரஸ்ஸல் 5 (5) ரன்களிலும், ராணா 80 (56) ரன்களிலும், கேப்டன் மோர்கன் 2 (3) ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சற்று அதிரடி ஆடி கொல்தக்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 22 (9) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஹைதராபாத் தரப்பில் முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.