துபாய்: ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது.
இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இந்த இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று முன்தினம் (செப். 19) தொடங்கின.
இளம் வீரர்கள் அசத்தல்
தொடரின் 32ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று (செப். 21) எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49, லோம்ரோர் 43, எவின் லீவிஸ் 36 ரன்களையும் எடுத்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராகுல் 3000
சற்று கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் மாஸான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை எடுத்திருந்தது.
கேப்டன் ராகுல் 25 ரன்கள் கடந்தபோது, ஐபிஎல் போட்டியில் தனது 3,000 ரன்களை (80 இன்னிங்ஸ்) கடந்தார். பவர்பிளே ஓவர்களில் ராகுல் மூன்று முறை ராஜஸ்தான் வீரர்களுக்கு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். எவின் லீவிஸ், ரியான் பராக், திவாத்தியா ஆகியோர் அடுத்தடுத்து ராகுல் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டனர்.
அதன்பின்னர், மயாங்க் அகர்வால், ராகுலுடன் இணைந்து அதிரடியில் இறங்க ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால், 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்களை எடுத்தது.
அரை சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் 12ஆவது ஓவரில் சக்கரியாவின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார். ராகுல் தான் சந்தித்த 33 பந்துகளில் நான்கு பவுண்டரி, 2 சிக்ஸர் என 49 ரன்களை அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் கே.எல். ராகுல் முதலிடத்தில் உள்ளார்.
தொடர்ந்து, ஏழு பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய 67 ரன்கள் எடுத்திருந்த மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், களமிறங்கிய பூரன், மார்க்ரம் இணையும் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தது.
அந்த இரண்டு ஓவர்கள்
இதனால், கடைசி 2 ஓவருக்கு வெறும் 8 ரன்களே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய முஸ்தபிஷுர் ரஹ்மான் மிகவும் கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை இளம் வீரர் கார்த்திக் தியாகி வீச வந்தார்.
அதுவரை 3 ஓவர்களை வீசியிருந்த தியாகி 28 ரன்களை கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. இதனால், ஆட்டம் 99 விழுக்காடு பஞ்சாப் பக்கமே இருந்தது.
தியாகியின் த்ரில் ஓவர்
தியாகி வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்தை மார்க்ரம் வீணடிக்க, இரண்டாவது பந்தில் அவர் சிங்கில் அடித்தார். ஆட்டத்தை ஒரு வின்னிங் ஷாட் அடித்து முடித்துவைக்கும் மனநிலையில் இருந்த பூரன், மூன்றாவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இப்போது, ஆட்டம் 3 பந்துகளில் 3 ரன்கள் என்ற 50:50 நிலைக்கு வந்துவிட்டது. புதிதாக களமிறங்கிய தீபக் ஹூடா நான்காவது பந்தை வீண்டித்து, அடுத்த பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்ட ஆட்டம் பரபரப்பானது.
பின்னர், ஃபாபியன் ஆலன் களத்திற்குவந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தை துல்லியமான யார்க்கராக வீசிய தியாகி, ராஜஸ்தான் அணிக்கு 'த்ரில்' வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
பஞ்சாப் அணியில், ராகுல்-அகர்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து பலமான தொடக்கத்தை அளித்திருந்தனர். கடைசியில் 6 விக்கெட்டுகள் கையிலிருந்தும் பஞ்சாப் அணி, துரதிருஷ்டவசமாக 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
இறுதி ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டும் கொடுத்து அட்டகாசமாக பந்து வீசிய இளம் வீரர் கார்த்திக் தியாகி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை