நவி மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்.14) நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது.
இதன் மூலம், குஜராத் பேட்டிங்கில், கேப்டன் பாண்டியா 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 52 பந்துகளில் 87 ரன்களை எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்தது. மேலும், பாண்டியாவுடன் சேர்ந்து அபினவ் மனோகர் 43 (28), டேவிட் மில்லர் 31 (14) ரன்களை எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹால், குல்தீப் சென், ரியான் பராக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து, பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட ராஜஸ்தான் அணி 193 ரன்களை துரத்தி பிடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதற்கு எதிர்மாறாக அந்த அணியின் பேட்டர்கள் நேற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், ஃபெர்குசன், யாஷ் தயாள் ஆகியோர் அட்டகாசமான பந்துவீச்சி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது.
34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் சார்பில் ஓப்பனர் பட்லர் மட்டும் 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என 24 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அசத்தினார். மேலும், ஆட்டநாயகனாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா தேர்வானது குறிப்பிடத்தக்கது.