மும்பை: ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டம் நேற்று (மே 14) எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 28 பந்துகளுக்கு 49 ரன்களை எடுத்தார்.
அதேபோல, சாம் பில்லிங்ஸ் 29 பந்துகளுக்கு 34 ரன்களையும், ரகானே 24 பந்துகளுக்கு 28 ரன்களையும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். ஆகவே, 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்க வீரர்களான கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். இருப்பினும் வில்லியம்சன் 9 ரன்களில் வெளியேறிய பிறகு, அடுத்தடுக்கு விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 123 ரன்களை மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளுக்கு 43 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 25 பந்துகளுக்கு 32 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில், ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: பெங்களூருவை வீழ்த்திய பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்