மும்பை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள், மும்பை பிரபார்ன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். மயங்க் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடி 33 ரன்கள் குவித்தார்.
இதைத் தொடர்ந்து, லியம் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். இவருக்கு பக்க பலமாக ஜிதேஸ் சர்மா 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். அவர் தன் பங்குக்கு 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மற்ற வீரர்கள் பனுகா ராஜபக்சே (9), ஷாருக் கான் (6), ஓடியன் ஸ்மித் (3), ராகுல் சாஹர் (12) என சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ரபடா 12 ரன்களிலும், வைபவ் அரோரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 8 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன், டிவாயின் பிரிடோரிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி, பிராவோ, கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வார்ட் ஆகியோர் களம் இறங்கினர். இந்த நிலையில், இரண்டாவது ஓவர் முடிவில் (ஓவர் - 1.6) ஒரு ரன் எடுத்திருந்த கெய்க்வார்ட், வைபவ் அரோரா ஓவரில் அவுட் ஆனார்.
தொடர்ந்து ராபின் உத்தப்பா ரபடா ஓவரில் (ஓவர் - 2.2) ஷிகர் தவானிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். இந்த நிலையில் வந்த வேகத்தில் மொயில் அலி ரன் எதுவும் எடுக்காமல் திரும்பினார். அடுத்த வந்த ஜடேஜாவும் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்ப 5.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை 23 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், சிவம் துபே தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். ஷிவம் துபே 30 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் அதிரடியாக ஆடி 57 ரன்கள் எடுத்தார். 28 பந்துகளில் 23 ரன்களுடன் தோனி சற்று தாக்குபிடித்தார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களிலேயே 126 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதனால், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. பஞ்சாப் சார்பில், ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பேட்டிங்கில் 60 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள லிவிங்ஸ்டன் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4ஆவது இடத்திலும், சென்னை 3 தோல்விகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, குஜராத் ஆகியவை முறையே முதல் மூன்று இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.