பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, கேப்டன் டு பிளெஸ்ஸி களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். 61 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார்.இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் டுபிளெஸ்ஸியுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பெங்களூரு அணி 200 ரன்களை கடந்தது.
29 பந்துகளில் 59 ரன்கள் (6 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசிய மேக்ஸ்வெல், மார்க்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. டுபிளெஸ்ஸி 79, தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
லக்னோ அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை மார்க்வுட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 213 ரன்கள் வெற்றி இலக்குடன் லக்னோ அணி பேட்டிங்கை தொடங்கியது. கைல் மேயர்ஸ் (0), தீபக் ஹூடா (9 ரன்), குருணல் பாண்ட்யா (0) ஆகியோர் பெங்களூருவின் வேகப்பந்து வீச்சில் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
லக்னோ அணி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் லோகேஷ் ராகுலும், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் கை கோர்த்தனர். ராகுல் தடுப்பாட்டத்தில் ஈடுபட, ஸ்டோனிஸ் பந்தை எல்லா பக்கமும் சிதறி ஓட விட்டார். அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய ஸ்டோனிஸ் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் கரன் ஷர்மா வீசிய பந்தில் ஷபாஸ் அகமதுவிடம் கேட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் ராகுலும் 18 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 6-வது களமிறங்கிய விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் துவங்கினார். இதனால் ஸ்கோர் மின்னல்வேகத்தில் எகிறியது. கரண் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், பர்னெலின் ஓவர்களை தட்டி தூக்கி பவுண்ட்ரிகளாக பறக்க விட்ட பூரன் 15 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
ஐபிஎல் நடப்பு தொடரில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பூரன் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் வீசிய பந்தில் ஷபாஸ் அகமதுவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஆயுஷ் பதோனியும் (30 ரன்) விக்கெட்டை பறிகொடுத்ததால் பதற்றமான சூழல் உருவானது.
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த லக்னோ அணி மார்க்வுட் (1 ரன்), ஜெய்தேவ் உனட்கட் (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கடைசி பந்தை சந்தித்த ஆவேஷ்கான் பந்தை அடிக்க தவறினாலும் வேகமாக ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. இந்த வெற்றி லக்னோ அணியின் அதிக பட்ச சேசிங் ஆக அமைந்தது.
இதையும் படிங்க: DC vs MI: தொடர் தோல்வி முகம்-முதல் வெற்றியை ருசிக்கப் போவது யார்?