ஜபிஎல் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி துபாயில் நேற்று (அக்.05) நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயஸ் அயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய டெல்லி அணியின் ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டோயினிஸ், கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 53 ரன்கள் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து, 197 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இந்த இமலாய இலக்கால் பதற்றம் அடைந்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்டட் படிக்கல், 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து, மூன்றாவதாக களத்தில் இறங்கிய அணியின் கேப்டன் விராட் கோலிக்காக சாதனைக் கதவுகள் காத்துக் கொண்டிருந்தன.
இந்தப்போட்டிக்கு முன்னதாக 285 டி-20 போட்டிகளில் விளையாடியிருந்த விராட் கோலி 8,990 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் முதல் 10 ரன்களை எடுத்திருந்த நிலையில், டி-20 போட்டிகளில் 9000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 13,296 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் புரிந்தபோதிலும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!