ஐபிஎல் தொடரில் இன்று (அக்.22) நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சாம்சன் - ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களையும், ஸ்டோக்ஸ் 30 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சறுக்கலாக, கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே - விஜய் சங்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியது. இதில் சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே அரை சதம் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விஜய் சங்கரும் அரை சதம் கடந்து அசத்தினார்.
இதனால் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே ஆஃப் வாய்ப்பையையும் ஹைதராபாத் தக்கவைத்துக் கொண்டது.
இதையும் படிங்க: “நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”- கோலி