மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த நான்கு போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்த காயம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா களம் இறங்கினார். தனக்கு காயம் ஏற்பட்டதிலிருந்து தேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இடது காலில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம், மீண்டும் ஏற்பட்டால் அவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதிலிருந்து அவர் மீள்வதற்கு நீண்ட காலம் கூட எடுக்கும் என கூறப்படுகிறது.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவதற்கு முன்பு கங்குலி கொடுத்த பேட்டியில், " காயம் காரணமாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. காயம் இல்லாவிட்டால், ஏன் ரோஹித் சர்மா போன்ற வீரரை அணியில் எடுக்காமல் இருக்கப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது இயல்புதான்.
குறைவாக விளையாடினால் காயங்கள் அதிகம் ஏற்படும், அதிகமாக விளையாடினால் உடல் நன்கு ஃபிட் ஆகும். காயங்களும் குறைவாக ஏற்படும். ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்யவோம். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவரும் அவர் உடல்நிலை குறித்து கண்காணித்துவருகிறார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கை நீண்ட காலம் கொண்டது என்பதையும், அது இந்த ஐபிஎல் போட்டியிலோ அல்லது அடுத்த தொடரோடோ முடியாது என்பதையும் ரோஹித் சர்மா நன்கு அறிவார். அவருக்கு எது சரி என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு அவருக்கு முதிர்ச்சி இருக்கிறது" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 'இளசுகளே மண்ட பத்திரம்'- சச்சின் டெண்டுல்கர்!