ஐபிஎல் தொடரின் 50ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி கெய்ல், ராகுல் ஆகியோரின் அதிரடியால்20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டோக்ஸ் - உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே பென் ஸ்டோக்ஸ் அதிரடி மோடுக்கு மாறினர். பஞ்சாப் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஷமி, முருகன் அஸ்வின் ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு தொடர்ந்து பறக்கவிட்டார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 54 ரன்களைக் ராஜஸ்தான் அணி கடந்தது. 6ஆவது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஸ்டோக்ஸ் அரைசதம் கடக்க, அதற்கடுத்த பந்திலேயே விக்கெட் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 66 ரன்கள் எடுத்தது. பின்னர் சஞ்சு சாம்சன் - உத்தப்பா இணை நிதானமாக ரன்கள் சேர்த்ததோடு, அவ்வப்போது பவுண்டரிகளாகவும் விளாச, 10 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்தது. நிதானமாக ஆடிவந்த உத்தப்பா சிக்சர் அடிக்க எண்ணி 30 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் புக, ஆட்டம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருமுனையில் ஸ்டீவ் ஸ்மித் சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை சாம்சனிடன் கொடுக்க, முருகன் அஸ்வின் வீசிய 13ஆவது ஓவரில் 13 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் 14ஆவது ஓவரில் 12 ரன்கள் சேர்க்க, 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அப்போது சஞ்சு சாம்சன் 48 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, பட்லர் வந்தார். கடைசி 5 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 10 ரன்கள் சேர்க்க, 4 ஓவருக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அதன் பின்னர் அதிரடிக்கு மாறிய ஸ்டீவ் ஸ்மித் - பட்லர், ஒரே ஓவரில் 19 ரன்கள் சேர்த்தனர். இறுதியாக 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு ராஜஸ்தான் அணி முற்றுப்புள்ளி வைத்தது.
இதையும் படிங்க: முதலும் கோலி, சதமும் கோலி - மாஸ் காட்டிய பும்ரா!