ஐபிஎல் தொடரின் ப்ளே சுற்றில் நடக்கும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா - டி காக் இணை களமிறங்கியது. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை டி காக் பறக்கவிட, ஆட்டம் பரபரப்பானது. இதையடுத்து இரண்டாவது ஓவரை அஸ்வின் வீச, ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ரோஹித் இல்லையென்றாலும், டி காக் - சூர்யகுமார் இணை டெல்லி பந்துவீச்சாளர்களின் பந்துகளை அனைத்து திசைகளிலும் சிதறடித்தது. ஒவ்வொரு ஓவரிலும் இரண்டு பவுண்டரி அல்லது ஒரு சிக்சர் என கணக்கு வைத்து அடித்த மும்பை, பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் குவித்தது.
பின்னர் 8ஆவது ஓவரின்போது அஸ்வின் வீசிய பந்தை சிக்சர் அடிக்க முயன்று டி காக் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷன் கொஞ்சம் அடக்கி வாசிக்க, 10 ஓவர்களில் மும்பை அணி 93 ரன்களை எடுத்தது.
இதனால் 200 ரன்கள் டார்கெட் வைத்துவிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், சூர்யகுமார் 51 ரன்களிலும், பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் குறைந்தது. இதனால் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது.
பின்னர் நார்கியே வீசிய 16ஆவது ஓவரில் இஷான் - குர்ணால் இணைந்து 18 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் அடுத்த ஓவரிலேயே குர்ணால் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட, இஷானும் அவருடன் சேர்ந்துகொண்டார். 18ஆவது ஓவரில் 17 ரன்களும், 19ஆவது ஓவரிலும் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 18 சேர்க்கப்பட்டது. இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 180 ரன்களை தொட்டது.
நார்கியே ஓவரை வீசிய நார்கியே பந்தில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாச, இஷான் கிஷன் தன் பங்கிற்கு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது.
இதையும் படிங்க: ஒருவிதத்தில் ஒரு வருட தடையும் நல்லது தான்: ஷகிப் அல் ஹசன்