ஐபிஎல் தொடரில் இன்று (அக்.04) நடைபெற்று வரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது
அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ்வும் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் - இஷான் கிஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டி காக், ஐபிஎல் தொடரில் தனது 14ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், 39 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷானும் 31 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் ஹர்திக் பாண்டியா, கிரன் பொல்லார்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 67 ரன்களை குவித்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: யுஏஇ வந்தடைந்த பென் ஸ்டோக்ஸ்!