ஐபிஎல் தொடரில் இன்று (செப்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபிஞ்ச் - தேவ்தத் படிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த ஆரோன் ஃபிஞ்ச் ஐபிஎல் தொடரில் தனது 15ஆவது அரைசதத்தையும், தேவ்தத் படிகல் தனது இரண்டாவது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.
பின்னர் இறுதியில் களமிறங்கிய ஏபிடி வில்லியர்ஸ் எதிரணி பந்துவீச்சை சிக்சர்களாக மாற்றி, ஐபிஎல் தொடரில் தனது 35ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. அந்த அணியில் டி வில்லியர்ஸ் 55 ரன்களையும், தேவ்தத் படிகல் 54 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 52 ரன்களையும் எடுத்தனர்.
இதன் பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த டி காக், சூர்யகுமார், யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இஷான் கிஷான் அணியின் ஸ்கோரை மெள்ள மெள்ள உயர்த்திவந்தார். இதன்மூலம் இஷ்சான் கிஷன், 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த பொல்லார்டும் மைதானத்தில் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணியின் வெற்றிக்கு முயற்சித்தார்.
பின்னர் 99 ரன்களை எடுத்த இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் ஒரு பந்திற்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பொல்லார்ட் பவுண்டரி விளாசி ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டுசென்றார்.
இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியினர் வெற்றி இலக்கை அடைந்தனர். சூப்பர் ஓவர் முறையில் பெங்களூரு அணி, மும்பை அணியை வீழ்த்தி இத்தொடரின் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமாகும் புதிய அணி - ரசிகர்கள் மகிழ்ச்ச