2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒன்பது அணிகள் பங்குபெறும் எனவும், 2023ஆம் ஆண்டில் 10 அணிகள் பங்குபெறும் என்றும் முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது பிசிசிஐஇன் எதிர்கால நடவடிக்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் பேசுகையில், ''ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என உணர்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு அணிக்குமான இளம் வீரர்களின் வரவு அதிகரித்தே வருகிறது. திறமை வாய்ந்த பல இளம் வீரர்களுக்கும் ஐபிஎல் தொடர்களில் போதுமான வாய்ப்புகளும் அமையவில்லை.
அதனால் அணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அடுத்த ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களின் பெயர்கள் வெளியே தெரிய வரும் என நான் எதிர்பார்க்கிறேன். இதற்கான முடிவை பிசிசிஐ வேகமாக எடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் மும்பை அணியின் தரம் பெரிய அளவில் இருக்கிறது. சர்வதேச தரத்திலான டி20 வீரர்களின் பங்களிப்போடு இளம் வீரர்களின் கலவை சரியாக அணியில் அமைந்துள்ளது.
முன்னதாக இளம் வீரர்களும் பலரும் மாநில ரஞ்சி டிராபி அணியைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. ஹரியானா போன்ற நகரங்களில் இருந்து சாஹல், அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ், டிவாட்டியா என பல ஸ்பின்னர்கள் உருவாகியுள்ளனர்'' என்றார்.
இதையும் படிங்க: பாரம்பரியத்திலிருந்து விலகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!