ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.23) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டி காக் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் தனது 37ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: சிஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!