இன்று (செப்.19) மாலை நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பையும் மீறி, ஒரு வீரருக்காக மொத்த நாடும் காத்துக் கொண்டிருக்கிறது.
ஆம், 437 நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் களம் காண உள்ள தோனியைக் காண கிரிக்கெட் உலகமே காத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்து வந்த தோனி, ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்.
ஆனால் கரோனா தாக்குதலால் அதுவும் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலவரையின்றி ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும் என அறிவித்து, செப்.19ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்து, அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் பிசிசிஐ வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி தோனி சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக வந்தார். அதற்கு அடுத்த நாளே, சுதந்திர தினத்தன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்தார். இதனால் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
தோனியை இனி நீல ஜெர்சியில் பார்க்க முடியாது. மஞ்சள் ஜெர்சியிலாவது பார்க்க வேண்டும் எனக் காத்திருக்கத் தொடங்கினர் ரசிகர்கள். அந்தக் காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்தக் காட்சியைப் பார்க்கப் போகின்றனர். தோனி மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கப் போகிறார்.
ஆனாலும் ரசிகர்களுக்கு இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. தோனி மீண்டும் அதே பழைய ஃபார்மில் உள்ளாரா என்ற கேள்வி தான் அது. அதற்கு நேற்று சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் பதிலளித்துள்ளார்.
அதில், ''தோனியிடம் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் அதே உடற்தகுதியுடனும் மனநிலையுடனும் ஈடுபாட்டுடனும் தான் இருக்கிறார். எங்களிடம் நல்ல அனுபவம் உள்ள வீரர்கள் உள்ளனர். அதனால் சரியான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் சென்னை அணி நிச்சயம் வழக்கம் போல் செயல்படும்'' என்றார்.
இதையும் படிங்க: கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனி ஸ்பெஷல்!