ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.10) நடைபெற்ற 24ஆவாது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. பரபரப்பான இந்தப் போட்டியில் கேகேஆர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியின் போது சந்தேகத்திற்கிடமான் முறையில் பந்துவீசியதாக கேகேஆர் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் மீது போட்டி நடுவர்கள் புகாரளித்திருப்பது ஐபிஎல் தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்களின் புகாரில், நேற்றையப் போட்டியின் கடைசி ஓவரை வீசிய சுனில் நரைன், வழக்கத்திற்கு மாறாக பந்தை எறிந்தார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும் என்று தெரிவித்திருந்தனர்.
நடுவர்களின் புகாரைத் தொடர்ந்து கேகேஆர் அணியின் சுனில் நரைன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்படவில்லை. ஒருவேளை சுனில் நரைன் மீது மீண்டும் இந்த குற்றச்சாட்டு எழும் பட்சத்தில் அவருக்கும் ஐபிஎல் தொடரில் பந்துவீச தற்காலிக தடை விதிக்கப்படும் என்றும் ஐபிஎல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து சுனில் நரைன் தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு சாம்பியன்லீக் டி20 போட்டியில் நரைனின் பந்துவீ்ச்சில் சந்தேகம் எழுந்ததால் புகார் செய்யப்பட்டது. இதனால் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? மும்பை vs டெல்லி!