ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது, இந்தியா நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கோலி,டி வில்லியர்ஸ், ஃபிஞ்ச், ரஸ்ஸல், மோர்கன், நரைன் என அதிரடி வீரர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் பங்கேற்று, நான்கு வெற்றி, இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.
சுப்மன் கில், திரிபாதி, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெற்றுள்ளது அணிக்கு பலத்தைக் கூட்டுகிறது.
பந்துவீச்சில் சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், நாகர்கொட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முன்னதாக, பஞ்சாப் அணிகெதிரான போட்டியில் நரைனின் அசத்தலான பந்துவீச்சால், நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பியது கொல்கத்தா அணி. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அதே சுவாரஸ்யம் இருக்கும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், கடந்த போட்டியின்போது காயமடைந்த ரஸ்ஸல், இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியுள்ள சுனில் நரைனுக்கு இன்றையப் போட்டியில் வாய்பளிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவேளை இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் பங்கேற்காதபட்சத்தில் டாம் பான்டன், ஃபர்குசன் அல்லது க்றிஸ் கிரீனிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நடப்பு சீசனில் பங்கேற்ற ஆறு போட்டிகளில், நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது.
ஆரோன் ஃபிஞ்ச், டி வில்லியர்ஸ், படிகல், விராட் கோலி என நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றியை ஈட்டும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ், சுழற்பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தரும் அணிக்கு வலிமை சேர்ப்பதினால், இன்றைய ஆட்டத்தில் இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் சமமான வெற்றி விகிதத்தில் இருப்பதினால், இன்றைய ஆட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்:
கொல்கத்தா, பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி:
கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ராகுல் திரிபாதி, சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல்/ டாம் பான்டன், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர்,குர்கீரத் சிங் மான், இசுரு உதனா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2020: டெல்லியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது மும்பை