ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் இன்று (அக்.07) நடைபெறும் லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இந்த சீசனில் பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளது, இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும், அதன் பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது.
இதையடுத்து அணியில் செய்த சில மாற்றங்களால், பஞ்சாப் அணியுடான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. மேலும் இன்றைய போட்டியிலும் அதே அணிதான் ஏறக்குறைய களமிறங்கும் என்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் வாட்சன் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்துள்ளதால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணியின் வெற்றி ஏறத்தாள உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒருசில மாற்றங்கள் நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவெறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் சீசன் மிகப்பெறும் ஏமாற்றத்தை தந்துள்ளது. காரணம் இந்த சீசனில் பங்கேற்ற நான்கு போட்டிகளில் இரண்டு தோல்வி, இரண்டு வெற்றியை பதிவு செய்துள்ளது.
சுனில் நரைன், ரஸ்ஸல், ராணா என அதிரடியான பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால், கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் குறித்தும் கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது.
இன்றைய போட்டியில் நட்சத்திர வீரர்கள் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் கேகேஆர் அணியின் வெற்றி உறுதியாக தெரியவரும். பந்துவீச்சில் கம்மின்ஸ், நரைன், ஷிவம் மாவி, நாகர்கொட்டி ஆகியோர் தொடர்ந்து அசத்தி வருவதால், சிஎஸ்கே அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்:
சென்னை, கொல்கத்தா அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி முடிவின்றி அமைந்ததுள்ளது.
உத்தேச அணி:
சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர்.
கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), ராகுல் திரிபாதி, சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி.
இதையும் படிங்க:பிரெஞ்சு ஓபன்: அரையிறுதிச் சுற்றில் நடால்!