பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (செப்.26) நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டிக்கு பின்னர் கேகேஆர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, கேகேஆர் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், " இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். மேலும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் எனக்கு நம்பிக்கையளித்தனர். அதன் காரணமாகவே என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
வார்னர், பேர்ஸ்டோவ் ஆகிய இருவரும் அதிரடியான பேட்ஸ்மேன்கள். அவர்களைத் தொடக்கத்திலேயே வெளியேற்றாவிட்டால், பின்னர் அவர்களில் ஆட்டம் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றிவிடும். நான் பேர்ஸ்டோவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே கைப்பற்றியது அணிக்கு மிகவும் உதவியது. மேலும் அணியிலுள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டது, அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பாட் கம்மின்ஸை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. மேலும் அந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: டூ பிளேசிஸுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா!