ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.02) நடைபெறவுள்ள 14ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முன்னதாக, இந்த சீசனில் இரு அணிகளும், தலா இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த சீசனின் தொடக்கப் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை அணியை வீழ்த்தி, சென்னை அணி அசத்தல் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு வாய்த்த கெட்ட நேரமோ என்னவோ, அதற்கு அடுத்து நடைபெற்ற டெல்லி, ராஜஸ்தான் அணிகளுடனான போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது.
மேலும் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரிலிருந்து விலகியது, சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக தொடக்க வீரர்களின் ஆட்டம், சிஎஸ்கே அணி இதுவரை கண்டிராத மோசமான தொடக்கங்களை தந்துள்ளது.
இதில் தமிழ்நாடு வீரர் முரளி விஜய், ஏறக்குறைய இனி சென்னை அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துவிட்டார். ஷேன் வாட்சன், அவ்வபோது பவுண்டரிகளை விளாசியுள்ளதால், அவருக்கு சென்னை அணி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது.
மேலும் அம்பத்தி ராயுடு, டுவைன் பிரவோ ஆகியோரது உடல்நிலை சரியானதால், இன்றையப் போட்டியில் இருவரும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சுழற் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருவதால், சென்னை அணி இனி வேகப்பந்து வீச்சாளர்களைச் சார்ந்தே அனைத்து முடிவுகளை எடுக்கவேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வேகப் பந்துவீச்சில் சாம் கர்ரன், ஜோஷ் ஹசில்வுட், தீபக் சஹார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் தடைகளை தாண்டி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் சென்னை அணி, இந்த சீசனிலும் அதனை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருந்த ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முதல் வெற்றியை பதிவு செய்தது. அதிலும் அன்றைய போட்டியில், அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும், வழக்கத்திற்கு மாறாக தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதேசமயம் கேன் வில்லியம்சன், நிதான ஆட்டத்தை விடுத்து, அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்திருந்தார். ஹைதராபாத் அணியின் இந்த எதிர்மறையான வியூகம் அவர்களுக்கான பலனையும் வழங்கியது.
பந்து வீச்சு தரப்பில் தமிழ்நாடு வீரர் நடராஜன் தங்கராசு, அவர் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து யார்க்கர்களை வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். இவரின் பந்துவீச்சைக் கண்ட சச்சின், பிரெட் லீ ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் நடராஜன் மீது திரும்பியுள்ளது. சுழற்பந்துவீச்சில் ரஷித் கான் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங், பந்து வீச்சில் தனித்துவ வீரர்களை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, சென்னை அணியை வீழ்த்துமா? என்பதை இன்றைய ஆட்டத்தில் காண்போம்.
நேருக்கு நேர்:
சென்னை, ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் தொடரில், இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறையும், ஹைதராபாத் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி விகிதாசர அடிப்படையில் சென்னை அணி வலிமையாகத் தெரிந்தாலும், இந்த சீசனில் ஹைதராபாத் அணியை சமாளிக்குமா என்பது போட்டியின் முடிவின் போதே தெரியும்.
மைதானம்:
இன்றையப் போட்டி நடைபெறவுள்ள துபாய் மைதானமானது, பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.
உத்தேச அணி:
சிஎஸ்கே: முரளி விஜய்/ருதுராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு , மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹசில்வுட்/ டுவைன் பிராவோ.
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், கலீல் அஹ்மத்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: கேகேஆரிடம் சுருண்ட ராஜஸ்தான்!