கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் முதல் வரிசை வீரர்கள் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஹெட்மையர் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இறுதியாக அதிரடியில் மிரட்டிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20 பந்துகளில் அரை சதமடித்து, ஆட்டத்தின் போக்கை டெல்லி அணியின் பக்கம் மாற்றினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 51 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களை எடுத்திருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், ஷெல்டன் காட்ரோல் இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கத்தை தந்தார். இதன் மூலம் ஆறு ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல், மோஹித் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பந்துவீச வந்த ரவிசந்திரன் அஸ்வின், தனது முதல் பந்திலேயே கருண் நாயரை வெளியேற்றி அசத்தினார். அவரை தொடர்ந்து, அதே ஓவரிலேயே நிக்கோலஸ் பூரானையும் டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் ஆட்டம் பஞ்சாப் அணியின் கையைவிட்டு நழுவியது என்று நினைத்தபோது, மறுமுனையில் பொறுமையை கடைபிடித்து வந்த மயங்க் அகர்வால், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியினருக்கு நம்பிக்கையளித்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த கிருஷ்ணப்பா கவுதமும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட, ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.
அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி விக்கெட்டை பறிகொடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்களை பறிகொடுத்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், நிக்கோலஸ் பூரான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். டெல்லி அணியில் சூப்பர் ஓவரை ராபடா வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். பஞ்சாப் அணி சார்பில் சூப்பர் ஓவரை முகமது ஷமி வீசினார். சூப்பர் ஓவரை எதிர்கொண்ட டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.