ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா - ஷிகர் தவான் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இப்போட்டியில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 42 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 53 ரன்களை எடுத்தார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தேவ்தத் படிகல், ஆரோன் ஃபிஞ்சு,ஏபிடி வில்லியர்ஸ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலியும் 43 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.