ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலகமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(அக்.06) நடைபெறவுள்ள 20ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சமீபத்தில் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு சாதனையை படைக்கவும் காத்திருக்கிறார்.
அதாவது, நடப்பு ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா மேலும் 86 ரன்களை எடுக்கும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்கவுள்ளார். இன்றையப் போட்டியிலேயே ரோஹித் சர்மா இச்சாதனையை நிகழ்த்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 193 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா, ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்களுடன் 5,074 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: காலிறுதியில் மோதும் ஜோகோவிச் - கரேனோ புஸ்டா!