ஐபிஎல் தொடரின் இன்று (அக்.10) நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதீஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 58 ரன்களையும், சுப்மன் கில் 57 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரான், சிம்ரான் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்!