இன்று (அக்.23) நடைபெற்ற மும்பை-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த சீசனில் 11 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி, 8 போட்டிகளில் தோல்வி என மொத்தம் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தற்போது உள்ளது.
இந்நிலையில், இன்று அடைந்த தோல்வியால் சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வாய்ப்பை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, கடந்த 10 ஆண்டுகளாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் தனக்கான இடத்தை எப்போதும் அடைந்துவிடும்.
ஆனால் இம்முறை முதல்முறையாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்தி தோனி பேசுகையில், ''நிச்சயம் இந்தத் தோல்வி வலியை ஏற்படுத்துகிறது. இப்போது எங்கே தவறு நடந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு எங்களுடையதாக இல்லை. ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் அணியாக சிறப்பாக ஆடினோம். அனைத்து வீரர்களுக்கும் இந்தத் தோல்வி வலியைக் கொடுக்கும். அடுத்த மூன்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவோம்'' என்றார்.
இதையும் படிங்க: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய மும்பை!