2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் டெல்லி அணிக்கு தவான் - ஸ்டோய்னிஸ் இணை களமிறங்கியது. இதனை எதிர்பாராமல் இருந்த ஹைதராபாத் அணி வழக்கம்போல் சந்தீப் ஷர்மாவுக்கு முதல் ஓவர் கொடுத்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அதிரடியை கையில் எடுத்த இந்த பேட்டிங் இணை, ஹைதராபாத் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் பவர் ப்ளே ஓவர்களில் வெளுத்து வாங்கினர். அதிலும் ஹோல்டர் வீசிய 4ஆவது ஓவரில் ஸ்டோய்னிஸ் 18 ரன்களை சேர்த்தார்.
இத்தனை ஆட்டங்களாக பவர் ப்ளே ஓவர்களில் விரைவாக விக்கெட் கொடுத்த டெல்லி அணி, பல ஆட்டங்களுக்கு பின் பவர் ப்ளேவில் விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்த்தது. 6 ஓவர்களில் 65 ரன்களை இந்த இணை சேர்த்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இணை 8 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்த நிலையில், 9ஆவது ஓவரில் ரஷீத் கான் வீசிய பந்தில் ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆட, மறுமுனையில் தவான் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். இதனால் 10 ஓவர்களில் டெல்லி அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் 21 ரன்களில் வெளியேற, ஹெட்மயர் களம் புகுந்தார்.
இவர் வந்ததிலிருந்தே அதிரடியாக அடிக்க, டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறியது. ஹோல்டர் வீசிய 18ஆவது ஓவரில் நான்கு பவுண்டரி அடிக்க, 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதற்கு அடுத்த ஓவரில் தவான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 19ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. பின்னர் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்க, 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: எங்களால் நிச்சயம் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும்: ஸ்டோய்னிஸ்