ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் குடும்ப நபர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணி மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உட்சபட்சமாக கிரிக்கெட் ரசிகர் என்ற பெயரில், சமூக வலைதளப்பக்கத்தில் தோனியின் ஐந்து வயது மகள் ஸிவாவிற்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்நபர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்குச் சென்று, தோனி ஒழுங்காக விளையாடவில்லையென்றால் அவர்களுடைய ஐந்து வயது மகளான ஸிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு ட்விட்டரில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிரஞ்ச் ஓபன் : 13ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நடால்!