ஐபிஎல் தொடரில் இன்று (அக்.14) நடைபெற்று வரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் ஐபிஎல் தொடரில் தனது 39ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 57 ரன்களை எடுத்திருந்த நிலையில் தவான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் தனது பங்கிற்கு 53 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இப்போட்டியின் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:“சாம் கர்ரன் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்” - தோனி!