ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
அபுதாபிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்கள் அங்கம் வகிப்பதால் இன்றைய போட்டியில் வெற்றியை ஈட்டுவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எதிரணியினருக்கு சவால் விடும் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பினும், நடுநிலை வீரர்கள் தங்களது பங்களிப்பை சரிவர செய்யாததால், முதல் இரண்டு போட்டிகளிலும் ஹைதராபாத் அணி படுதோல்வியைச் சந்தித்தது.
வார்னர், பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே போன்ற நட்சத்திர வீரர்களைத் தவிர பிற பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவதால், வெற்றி பெற வேண்டிய சூழலிலும் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. நடுகள வரிசையினர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணியின் சவாலை ஹைதராபாத் அணி எளிதில் தகர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீச்சு தரப்பில் நடராஜன், அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். அதேசமயம் நட்சத்திர வீரர்கள் புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் ஹைதராபாத் அணியின் வெற்றியை எதிரணி தடுக்க இயலாது. இன்றைய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
இந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது. அதிலும் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணியின் வெற்றிக்கு உதவுகிறது.
பந்துவீச்சாளர்கள் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
மேலும் சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சானே என பெரும் படை உள்ளதால், இன்றைய போட்டியில் இவர்களில் யார் இடம்பெறுவார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி, அதனை தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை போட்டியின் முடிவுக்கு பிறகு பார்ப்போம்.
நேருக்கு நேர்:
ஹைதராபாத், டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மைதானம்:
இன்றைய போட்டி நடைபெறும் அபுதாபி மைதானமானது, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் இரு அணியிலும் ரஷித் கான், முகமது நபி, அஸ்வின், அமித் மிஸ்ரா, லமிச்சானே என மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளது இரு அணிக்கும் கூடுதல் பலமாகும்.
உத்தேச அணி:
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன்/முகமது நபி, மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், சஹா, அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், பசில் தம்பி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல்/ரவிசந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே,ஆவேஷ் கான், ககிசோ ரபாடா.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!