ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின.
இப்போட்டியில் இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் ஆடிய மும்பை அணி 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, மலிங்கா வீசிய பந்தை எதிர்கொண்ட துபே ரன் ஏதும் எடுக்க முடியாததால், மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால், மலிங்கா வீசிய அந்த கடைசி பந்து நோ-பால் என்று பின்னரே தெரியவந்தது.
இது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் மற்றொரு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்போட்டியில், நடுவராக இருந்த இந்திய அம்பயர் ரவி அந்த நோ-பாலை அறிவிக்க தவறியதால் பெங்களூரு அணியின் வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு பறிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் கோலி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மலிங்காவின் நோ-பால் குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது,
'நான் மைதானத்தில் இருந்து வெளியே சென்ற பின்புதான், மலிங்கா வீசியது நோ-பால் என்பது தெரியவந்தது. இதுபோன்ற தவறுகள் ஒரு நல்ல கிரிக்கெட் போட்டிக்கு உகந்தது அல்ல. ஆனால் இதுபோன்ற தவறுகள் நடப்பதை பார்ப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் எங்களது தவறுகளை திருத்திக்கொள்வதைப்போன்று வருங்காலங்களில் அம்பயர்களும் அவர்களின் தவறுகளை திருத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
ஆர்சிபி ஒரு சிறந்த அணி; அந்த அணியை நம்மால் எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. எனினும் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிகட்டத்தில் அவர்களுக்கு சற்று நெருக்கம் கொடுக்க முடிந்தது' என அவர் தெரிவித்தார்.