இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து கிறிஸ் லின் - சுனில் நரைன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை தொடக்கத்திலே அதிரடி காட்டியது. இரண்டாவது ஓவரை வீசிய நதீம் பந்தில் 4, 1 , 6 , 1, 0 , 6 என 18 ரன்களை எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை அச்சமூட்டியது.
தொடர்ந்து அடுத்ததாக கலீல் அகமத் வீசிய ஓவரில் 6, 4, 4 என பறக்கவிட்டு அடுத்த பந்தில் நரைன் போல்டாகி 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து இளம் வீரர் கில் களமிறங்கி மூன்று ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராணாவும் நீண்ட நேரம் நிலைக்காமல் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 8 ஓவர்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து வந்த கேப்டன் தினேஷ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆகி 6 ரன்களில் வெளியேற, அடுத்ததாக ரஸல் வருவார் என எதிர்பார்த்த நிலையில், ரிங்கு சிங் களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியமடையவைத்தது.
பின்னர் ரிங்கு சிங் - லின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொல்கத்தா அணி 15 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்திருந்தபோது, அடுத்த ஓவரில் ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடி வீரர் ரஸல் களம் புகுந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய லின் ஐபிஎல் தொடரில் தனது ஒன்பதாவது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின்னர் அதிரடிக்கு மாறிய லின் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணியின் ஸ்கோர் திரும்பவும் ரஸலை நம்பியே போனது.
பின்னர் சாவ்லா - ரஸல் இணை ஜோடி சேர்ந்தது. ரஷித் கான் வீசிய 18ஆவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 19ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட ரஸல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து 20ஆவது ஓவரில் சாவ்லா நான்கு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணி சார்பாக கலீல் அகமத் மூன்று விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.