12-வது ஐபிஎல் சீசன் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரராக நட்சத்திர வீரர் வார்னர் - பெர்ஸ்டோவ் களமிறங்கினர். வார்னர் பந்தை சேதபடுத்திய புகாரால் கடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஒரு ஆண்டுக்கு பின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு திரும்பினார்.
இதனையடுத்து, தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த இணை, போகப்போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை புரட்டி எடுத்தது. குறிப்பாக வார்னர், 31 பந்துகளில் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். அதில், 2 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் இது வார்னர் அடிக்கும் 37-வது அரை சதமாகும்.
முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில், பேர்ஸ்டோவ் 39 ரன்களில் வெளியேற, பின்னர் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். அவருடன் இணைந்த வார்னர், தொடர்ந்து அதிரடி காட்ட, ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த யூசுப் பதான் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த மணீஷ் பாண்டே - விஜய் சங்கர் ஜோடி, கொல்கத்தாவின் பந்துவீச்சை பதம் பார்த்தது. 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களும், பாண்டே 8 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.