ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் டி20 தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'சிட்னி தண்டர்ஸ் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், நிர்வாகத்தினருக்கும், பயிற்சியாளருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்த அணி குறித்து நினைவுகள் எப்போதும் மறக்காது. எனது குடும்பத்திற்காக இந்த முடிவினை எடுத்துள்ளேன். நிக் கம்மின்ஸ், ஷேன் பாண்ட், பேடி அப்டன், லீ ஜெர்மன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.
37 வயதாகும் வாட்சன் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். பிக் பேஷ் தொடரில் அந்த அணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக கேப்டன்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், இது குறித்து சிட்னி தண்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் பாண்ட் கூறுகையில், வாட்சன் அணியில் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது வாட்சன் சென்னை அணிக்காக ஆடிவரும் நிலையில், இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.