ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில், சகிப்-உல்-ஹசன், தீபக் ஹூடா ஆகியோருக்கு பதிலாக கேப்டன் கேன் வில்லியம்சன், ஷதாஸ் நதீம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லரை, ஹைதரபாத் வீரர் ரஷித் கான் 5 ரன்னில் அவுட் ஆகினார்.
அதன் பின் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ரஹானே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாகவே எதிர்கொண்டனர். இதனால், முதல் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை யாவது அடித்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். இதில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய ரஹானே 12ஆவது ஓவரின் போது தனது 27ஆவது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார்.
அதுமட்டுமின்றி, கடந்த எட்டு போட்டிகளுக்கு பிறகு இவர் தனது முதல் அரைசதம் அடித்துள்ளார். இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்த நிலையில்,ரஹானே 70 ரன்களில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் இருந்த சஞ்சு சாம்சன் தனிஒருவனாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
குறிப்பாக, புவனேஷ்வர் குமார் வீசிய 18ஆவது ஓவரில் சாம்சன், நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 24 ரன்களை விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்துக்கு ஏற்றவாறு நான்ஸ்ட்ரைக்கில் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைத்தார்.
பின் புவனேஷ்வர் குமார் வீசிய இறுதி ஓவரை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகளை அடித்தார். இதனிடையே, சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்த சாம்சன் 20ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது.
டேத் ஓவரில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் தற்போது மோசமான நிலையில் உள்ளார். இந்தப் போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களை வீசிய அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 45 ரன்களை வாரிவழங்கியுள்ளார்.