ஐபிஎல் தொடரில் இன்று (செப்.22) நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். இதில், பந்துகளை பவுண்டரி லைனுக்குப் பறக்க விட்ட சாம்சன், 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம்சன், 74 ரன்களில் விக்கெட் இழந்து வெளியேறினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அரைசதம் விளாசி அசத்தினார்.
இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பங்கிற்கு கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை பறக்க விட்டார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 216 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம்சன் 74 ரன்களையும், ஸ்மித் 69 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷேன் வாட்சன் நம்பிக்கை அளிக்கும்படி தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால், வாட்சன் 33 ரன்களிலும், விஜய் 21 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வந்த சாம் கர்ரன் வழக்கம் போல் அதிரடியை வெளிப்படுத்தி இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். ஆனால் அவரும் 17 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழக்க, சென்னை அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.
இருப்பினும் இறுதி வரை போராடிய டூ பிளேஸிஸ் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூ பிளேஸிஸ் 72 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திவேதியா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.