பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில், 167 ரன் இலக்குடன் ஆடிய டெல்லி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஏரளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்:
டெல்லி வீரர்களான ஹர்ஷல் படேல், ரபாடா, லெமிச்சானே ஆகியோரை பஞ்சாப் வீரர் சாம் கரன் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் சாம் கரன், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பஞ்சாப் அணி வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இப்போட்டியில் அவர் 2.2 ஓவர்களில் 11 ரன்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
![Sam Curran](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/116507-evfnrgkcck-1554146326_0204newsroom_00162_947.jpg)
பஞ்சாப் அணிக்கு சிறப்பாக பந்துவீசிய வீரர்கள்:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரன் 2.2 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மூன்றாவது வீரர் என்ற பெயரை பெற்றார்.
5/14, அன்கீட் ராஜ்புட் - ஹைதராபாத் அணிக்கு எதிராக, ஹைதராபாத் (2018)
5/25, டிமிட்டரி மாஸ்கரன்ஹாஸ் - புனே அணிக்கு எதிராக, மொகாலி (2012)
4/11, சாம் கரன் -டெல்லி அணிக்கு எதிராக, மொகாலி(2019)
எட்டு ரன்களுக்கு 7 விக்கெட்:
குறிப்பாக, 16.3 ஓவர்களில் 144 ரன்களை எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, அடுத்த 17 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே சேர்த்து 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைசி 7 விக்கெட்டுகளை குறைந்த ரன்னில் இழந்த அணி என்ற மோசமான சாதனை படைத்தது.
8/7 டெல்லி - பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலி (2019)
12/7 டெக்கான் சார்ஜர்ஸ் - டெல்லி அணிக்கு எதிராக, டர்பன் (2009)
17/7 ராஜஸ்தான் - பெங்களூரு அணிக்கு எதிராக, பெங்களூரு(2010)
அதிக டக்:
நேற்றைய போட்டியில் டெல்லி வீரர்கள் (பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் படேல், ரபாடா, லெமிச்சானே) ஆகிய ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியில் இரண்டாவது முறையாக ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.
கொச்சி (6 வீரர்கள்) - டெக்கான் அணிக்கு எதிராக, கொச்சி (2011)
ஆர்சிபி (5 வீர்ரகள்) - பஞ்சாப் அணிக்கு எதிராக, பெங்களூரு (2008)
டெல்லி (5 வீரர்கள்) - மும்பை அணிக்கு எதிராக, மும்பை (2011)
டெல்லி (5 வீரர்கள்) - பஞ்சாப் அணிக்கு எதிராக, மொகாலி (2019)