12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை, டெல்லி ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், மூன்றாவது, நான்காவது இடத்தை பிடிக்க ஐதராபாத், பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் (7) - ராயல் சேலஞ்ரஸ் பெங்களூரு (8) அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், ராஜஸ்தான் அணி விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளை பெற்றுள்ளது. மறுமுனையில், பெங்களூரு அணி 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளை எடுத்துள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், பெங்களூரு அணி, சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிப்பார்கள் என கூறப்படுகிறது.
இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது.