ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, ஜாஸ் பட்லர், ரஹானே ஆகியோர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் இவ்விரு வீரர்களும் சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக பறக்கவிட்ட அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 31 ரன்களை சேர்த்த நிலையில், கேப்டன் ரஹானே 14 ரன்களில் தீபக் சஹாரின் பந்துவீச்சில் அட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷர்துல் தாக்குரின் 4ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய ஜாஸ் பட்லர் 23 ரன்களில் அவுட் ஆனார்.
இதனால், ராஜஸ்தான் அணி 3.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்களை எடுத்து இருந்தது. இந்த இக்கட்டான தருணத்தில் களத்தில் வந்த சஞ்சு சாம்சன் 6, ராகுல் திரிபாதி 10, ஸ்டீவ் ஸ்மித் 15 என வரிசையாக பெவிலியனுக்குத் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் தனது அறிமுகப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்ட்ட ரியான் பராக் 16 ரன்களில் நடையைக் கட்டினார். மறுமுனையில், 26 பந்துகளில் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்து பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில், ஜோவ்ரே ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.

சென்னை அணி தரப்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் ஐந்து ஓவர்களில் 50 ரன்களை அடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த 15 ஓவர்களில் 100 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால், “ஓப்பனிங்லாம் நல்லதான் இருக்கு... ஆனா ஃபினிஷிங் சரி இல்லையே பா” என நெட்டிசன்கள் அந்த அணியின் பேட்டிங் குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.