ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் பல்பரீட்சை நடத்தி வருகிறது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர்.
அணியின் ஸ்கோர் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - ரஹானே பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்தது. இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்த நிலையில், கேப்டன் ஸ்மித் 50 ரன்களுக்கு அவுட் ஆனார்.
பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும், ஏஷ்டன் டர்னர் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் உடன் நடையைக் கட்டினாலும், மறுமுனையில் இருந்த ரஹானே சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி, தனது 2ஆவது ஐபிஎல் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார்.
ரஹானே 105 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில், 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். டெல்லி அணி தரப்பில் ரபாடா 2, இஷாந்த் ஷர்மா, அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.