கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணயின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
பஞ்சாப் அணியில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக, தமிழக வீரர் முருகன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், பெங்களூரு அணிக்கு எதிராக ஆடிய அதே 11 வீரர்களுடன் மும்பை அணி களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டி காக் 60 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து, 177 ரன் இளக்குடன் ஆடிய பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய கெயில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டின் 300-வது சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
கெயிலைத் தொடர்ந்து, மூன்றாவது வீரராக வந்த மயங்க் அகர்வால், கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
24 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 40 ரன்களை எடுத்த அவர், குருணல் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 13.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்களை எடுத்திருந்தது.
இதன் மூலம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது, களத்தில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் விளாசினார். மறுமுனையில் இருந்த டேவிட் மில்லர் கே.எல் ராகுல் ரன் அடிக்க ஒத்துழைத்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்களை வெற்றிகரமாக எட்டியது. இதன் மூலம் பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி, தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.