மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, ரோஹித் ஷர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இவ்விரு வீரர்களும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்டனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்த நிலையில், ரோஹித் ஷர்மா 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சுர்யகுமார் யாதவ் 16 ரன்களில் பெவிலியன் திரும்ப நான்காவது வீரராக பொல்லார்ட் களமிறங்கினார். கடந்தப் போட்டியில் 31 பந்துகளில் 83 ரன்களை விளாசிய அவர் இன்றையப் போட்டியில் வெறும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, ஐந்தாவது வீரராக களம்புகுந்த ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிய டி காக் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். இதனால் மும்பை அணி 18.3 ஓவர்களில் 163 ரன்களை எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் பந்தை பவுண்டரி விளாசிய இஷான் கிஷான் அடுத்த பந்துலேயே 5 ரன்களோடு அவுட் ஆனார். மீத மிருந்த நான்கு பந்துகளில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்ததால், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோவ்ரே ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.