12-வது சீசனுக்கான ஐபிஎல் லீக் போட்டிகளில் ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் மோதின. அதில் ராஜஸ்தான் வீரர் பட்லரை பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினுக்கு எதிராகக் கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அஷ்வினின் செயலுக்கு ஆதரவுளித்துள்ளார். இதுகுறித்து பேசிய கபில் தேவ், “அஷ்வினின் செயல் சரியானதே. ஐசிசி விதிமுறையின்படியே அவர் பட்லரை மன்கட் செய்தார். இதற்கு அனைவரும் ஏன் அஷ்வினை குறைகூறுகிறீர்கள். இந்த விஷயத்தில் அஷ்வின் வேண்டுமென்றே குறி வைக்கப்படுகிறார்.
நான் தென்னாப்பிரிக்காவின் பீட்டர் கிறிஸ்டனை மன்கட் செய்தபோது, மூன்றுமுறை எச்சரித்தேன். அதற்கு பீட்டர், எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனை வேகப்படுத்தவே கிரீஸைவிட்டு வெளியேறுகிறேன் என்றார்.
பந்துவீச்சாளர் கிரீஸைவிட்டு கால்-ஐ வெளியில் வைத்தால் நோ-பால் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கோ எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பிரிட் ஆஃப் தி கேமை பாதுகாப்பதில் பந்துவீச்சாளர்கள் மட்டும் அதிக பொறுப்புகள் வழங்கப்படுவது ஏன்? பேட்ஸ்மேன்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா. கிரீஸைவிட்டு வெளியேறக் கூடாது என்பது விதி. அதனை பேட்ஸ்மேன் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பேட்ஸ்மேன் ரன்களை திருடும்போது தடுக்க வேண்டும். அதனைத்தான் அஷ்வின் செய்துள்ளார்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.